இறையியல் சார்ந்த விஷயங்கள் என்றாலே குடும்பம் இல்லற தாம்பத்தியம் நட்பு செல்வம் போன்ற வற்றை ஒதுக்கி வைக்க வேண்டும்போ அப்பரடிகள் போல வாதவூரர் போல துறவற நிலையில் இருக்க வேண்டும் என்ற மனப்பான்மைக்கு மாற்றாக நம்முடைய அன்றாட வாழ்வியலிலேயே இறைவனை எப்படி உருகி உருகி வணங்கலாம் என்று சொல்லி தந்தவர் நம் சுந்தர முர்த்தி சுவாமிகள்
நம்பியாரூரர் என்பது பிள்ளைத் திருநாமம் என்றாலும் தம்பிரான் தோழன் என்று சிறப்பிக்கப் படுவார்அவரால் இறைவனிடம் அழுது கேட்டு முறையிடமுடியும்வெறுப்பில் கோபிக்க முடியும்வறுமைக்கு பொருள் கேட்க முடியும்தண்டனைக்கு ஆளாக முடியும்காதலியின் பசிக்கு பொருள் கேட்க முடியும்மற்றவருக்கு உதவிட பரிந்துரை செய்ய முடியும்
ஒரு சகலகலா வல்லவராக கிட்டதட்ட ஒரு ஹீரோ என்று குறிப்பிட முழுத்தகுதியுடன் இருப்பவர் நம் சுவாமிகள்
அடியேன் உனக்கு அடிமை என்று முன்பே திருக்கயிலையில் ஆட்பட்டு இன்று நீர் வலிய வந்து அழைக்கும் போது, அடியேன் இல்லை என்று வல்வழக்கிட்டது தகுமோ??
என்று திருமணத்தில் தடுத்தாள வந்த இறைவனை எண்ணி பித்தா பிறைசூடி என்ற பெரிதாம் திருப்பதிகம் பாடிய சுவாமிகளின் பதிகமே
நமக்கு அருச்சனை பாட்டே ஆகும் என்று இறைவனை வியக்க வைத்த
சந்த தமிழ் சுவாமிகளின் பதிகங்கள்
சுந்தர மூர்த்தி சுவாமிகளின் பதிகங்கள் திருப்பாட்டு என்று சிறப்பிக்கப் படுகின்றன. எண்ணற்ற அற்புதங்களை புரிந்துள்ள சுவாமிகளின் தீந்தமிழ் வரிகளில்
இயற்கை நயமும் சொல்நயமும் வியக்க வைப்பன
மாங்கனிகளின் கனம் தாங்காமல் மாமரம் தாழ கனிகள் தரையில் கிடக்கும் காட்சியை
மாவின் கனி தூங்கும் பொழில் மாதோட்டம் என்று சுவாமிகள் சிறப்பிப்பது அழகிலும் அழகு
இறைவா நீ்ர் உம்மையே நினைக்கும் அடியார்களின் மனத்தில் உறைவதாக அப்பரடிகள் கூறுவாரே!!
அந்த மனக்கோயில் இருப்பிடம் உமக்கு பிடிக்கவில்லையா அதனால்தான் உம்மை நினைக்கும் அடியவர்களின் துன்பத்தை நீக்காமல் இருக்கின்றீரா??
என்ற நயத்தை
துருத்தி உறைவீர் பழனம் பதியாச் சோற்றுத்துறை ஆள்வீர் இருக்கை திருவாரூரே உடையீர் மனமே எனவேண்டா அருத்தி வைத்த அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வருத்தி வைத்து மறுமை பழித்தால் வாழ்ந்து போதீரே
என்று நமக்காக பரிந்துரைப்பார் சுவாமிகள்🙏🏻
சுவாமிகளின் வரலாற்றுக்கு துணை நிற்பது அவர்தம் பதிகங்களேதாம்
எண்ணற்ற அகச்சான்றுகள் நிறைந்தவை சுவாமிகளின் பதிகங்கள்
அவரது பதிகங்களை முழுக்க முழுக்க தரவாக படித்து உணர்ந்த பின்னரே சேக்கிழார் பெரிய புராணம் என்னும் சைவக்கருவூலம் யாத்துள்ளார்
உண்மையில் பெரியபுராணத்தின் ஹீரோ சுந்தர மூர்த்தி சுவாமிகள்தான்
அவரது சரித்திரத்தினை சொல்ல எழுந்த பெரியபுராணத்தில்
இடையில்தான்
திருத்தொண்டர் புராணங்கள் விவரிக்கப் படுகின்றன
கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
தொன் மயிலை வாயிலான்
நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன்
போன்ற அவரது திருத்தொண்டத் தொகை வரிகளால்
சுந்தர மூர்த்தி சுவாமிகள் ஒரு சரித்திர வல்லுனராக இருந்துள்ளார் என்பதும் திண்ணம்
என்றும் இளமை எப்போதும் மணக்கோலம் என்று இருந்த சுவாமிகளுக்கு வந்த சோதனை
அவர்தம் சிவத்தொண்டை காதலிக்கும் நம் போன்றவர்களுக்கு
சுவையான விஷயம்
காதலிகளுக்காக கயிலாயம் விட்டு வந்தவர்
காதலியால் கண்ணிழந்து
கூட்டோடு கயிலாயம் சென்றவர் நம் சுவாமிகள்
சக்கிலிக்காய் என் கண் கொண்டீர் என்று ஒரு பதிகத்தில் திருவொற்றியூரில் தம் கண் மறைப்பை சுவாமிகள் காட்சி படுத்துவார்
திருவிளம்பூர் என்பது தற்போது பூண்டி நீர் தேக்கம்.
விளம்பூர் என்பது உளோம் போகீர் என்பதன் திரிபு
திருவொற்றியூரில் கண்ணிழந்த சுந்தரர் பெருமான் தட்டு தடுமாறி பல கோயில்களில் வழிபட்டு
வெண்பாக்கம் வந்து குழைவிரவு வடிகாதா கோயில் உளாயோ என்று வினவ
ஊன்றுவதோர் கோலருளி உளோம் போகீர் என்றானே என்று இறைவர் ஊன்று கோல் தந்தருளிய சிறப்பை நமக்கு கடத்தி புல்லரிக்க வைத்துள்ளார் சுவாமிகள்
கோலை ஊன்றிய படியே கச்சியேகம்பம் வந்து கலங்கி நின்ற சுவாமிகள்
கம்பவாணர் திருமுன்
விண்ணாள்வார் அமுது உண்ண மிக்கபெரு விடம் உண்ட கண்ணாளா!! கடையானேன்
எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான் காண எழில் பவள வண்ணா கண்ணளித்து அருள்வாய் என்று வீழ்ந்து வணங்க,
மங்கை தழுவக்குழைந்த இறைவனும் மனம் இறங்கி கண்ணளித்து முலைச்சுவட்டு கோலந்தான் காட்ட ஆலந்தான் உகந்து என்று எடுத்து ஆடிப்பாடினார் நம் சுவாமிகள் என்பார் சகலாகம பண்டிதர் தெய்வ சேக்கிழார் பெருமான்
கச்சியேகம்பத்தில் இடக்கண் பெற்ற சுவாமிகள் நேரே திருவாரூர் வீதி விடங்கனிடம் வந்து
இன்னுமா எம் பிழை பொறுக்க வில்லை?? நான் வந்திருக்கும் ஊர் திருவாரூர் தானா என்று சந்தேகமாய் உள்ளது ஒற்றைகண்ணால் காண்பது கடினம் மற்றைக்கண் தாரீர் என்பதை
செருந்தி செம்பொன் மலருஞ் சோலை இதுவோ திருவாரூர் பொருந்தித் திருமூலட்டானம்மே இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழாது ஏத்துவோம் வருந்தி வந்தும் உமக்கு ஒன்று உரைத்தால் வாழ்ந்து போதீரே
என்று அழகுத்தமிழில் பாடி வலக்கண்ணும் பெற்று மகிழ்ந்த சுவாமிகள் இறைவனுக்கு ஆணையிட்ட சம்பவம் ஒன்று உள்ளது
இன்றைய கோவை அவினாசியில் சுவாமிகளின் காலத்தில் முதலைக்கு பிள்ளையை பலி கொடுத்த பெற்றோரின் கண்ணீர் துடைக்க
எற்றான் மறக்கேன் என்று துவங்கும் பதிகத்தின் நான்காம் பாடலில்
கரைக்கால் முதலையை பிள்ளைத் தரச்சொல்லு காலனையே
என்று இறைவனுக்கு ஆணை பிறப்பித்து பிள்ளையை உயிர்ப்பித்து நம் தமிழின் வல்லமையை பறை சாற்றியவர் சுவாமிகள்
திருவையாறின் தென்கரையில் இருந்து கோயிலுக்கு சென்று வழிபட முடியாமல் காவிரி வெள்ளம் தடுக்க
குழகா வாழை குலைதெங்கு கொணர்ந்து கரைமேல் எறியவே அழகார் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகேளோ என்று இறைவனை ஓலமிட்டு அழைக்க
பூவிரிக்கும் காவிரி நம்பிகளின் நாவிரிக்கும் தமிழ் கேட்டு விலகி வழிகொடுத்த வரலாறு நம் தமிழ் மொழியின் வல்லமைக்கு மற்றுமொரு சான்று
சுவாமிகள் இறைவனின் விளையாட்டில் கடுப்பாகி இறைவனை கடுப்படித்த பாடல் ஒன்றும் உள்ளது
திருமுருகன் பூண்டியில் வேடுவர்கள் மூலம் சுவாமிகளின் செல்வத்தை இறைவன் கவர்ந்து செல்ல ஆணையிட பொருளை இழந்த சுவாமிகள்
கொடுகு என்ற துவக்கத்தினை உடைய பதிகத்தில்
நகரத்தை காவல் காக்காமல் நீர் எதற்கு இங்கு உள்ளீர்?? உம்முடைய எருதின் கால் உடைந்து விட்டதா?? அது நன்றாக இருந்தால் இங்கிருந்து போய்விடும் என்று இறைவனை இப்படி கடுமையாகவே பாடுகிறார் சுவாமிகள்
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன் பூண்டி மாநகர் வாய் ஏறு கால் இற்றது இல்லையாய் விடில் எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரானீரே என்பது அவ்வரிகள்
சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில்
பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் என்பார்
அதாவது காசுக்காக மன்னர்களை புகழாமல் வறுமையிலும்
இறைவனை மட்டுமே பாடும் புலவர்கள்.
இந்த அழகிய வரிகளுக்கு உரை செய்த விதமாகவே திருப்புகலூரில்
தம்மையே புகழ்ந்து என்ற துவக்கத்தினை உடைய பதிகம் பாடும் சுவாமிகள்
உலக வாழ்வை வெறுத்து
உடலோடு கையிலாயம் சென்றவர்
இன்று கூண்டோடு கைலாசம் என்று நக்கலாக சொல்கிறோமே
அது கூட்டோடு கயிலாயம் சென்ற நம் சுவாமிகளின் வரலாறுதான்
வேறு எந்த அருளாளர்களும் சொல்லாத திருக்கயிலாயக் காட்சியையும்
அங்கு தேவர்களும் தேவிகளும் ரிஷிகளும் சூழ இறைவன் அமர்ந்திருக்கும் காட்சியை
கண்ணீர் மல்க நமக்கு சுவாமிகள் தரிசனம் செய்விக்கும் பதிகம்
தானெனை முன் படைத்தான் என்ற நொடித்தான் மலைப்பதிகம்
நிச்சயம் சுந்தர மூர்த்தி சுவாமிகள் பற்றி பேச இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது என்றாலும் காலம் கருதி இத்துடன் முடிக்கிறேன்
அவரது மனப்பாங்கையும் அவருக்கும் இறைவர்க்கும் இடைப்பட்ட உறவை அறியவும் சிறந்த சான்று அவர்தம் பதிகங்கள்தான்
ஏழாம் திருமுறையை ஓதி உணருங்கள் இறைவன் உங்களுக்கு இன்னும் நெருக்கமாக தெரிவான்🙏🏻🙂
தீபன்ராஜ் வாழ்க்கை
நமசிவாய

No comments:
Post a Comment