பதிவுகள்

Tuesday, 11 April 2017

சிவத்தின் தன்மையும் மீன் குழம்பும்



என்னடா இது வித்யாசமான ஒப்பீடு என்றே நிச்சயம் எண்ணுவீர்கள் ஆனால் உண்மையில் விஷயம் இருக்கிறது

உலகில் இறைவன் தான் சகலமும் என்கிறோம் ஆனால் நம் அப்பரடிகள் இறைவன் என்பது எதுவுமே இல்லை என்கிறார்

பாடலை பாருங்கள்

மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை  மலையல்லை

கடலல்லை வாயுவல்லை எண்ணல்லை எழுத்தல்லை

எரியுமல்லை இரவல்லை பகலல்லை யாவுமல்லை

பெண்ணல்லை ஆணல்லை  பேடுமல்லை பிறிதல்லை

யானாயும் பெரியாய் நீயே உண்ணல்லை நல்லார்க்குத் தீயையல்லை உணர்வரிய ஒற்றியூர் உடையகோவே

இப்பாடல்

ஆறாந்திருமுறையில் ஒற்றியூர் தாண்டகமாக உள்ளது
இதில் சுவாமிகள் சொல்கிறார்

இறைவன் மண் விண் சூரியன் மலை கடல் காற்று எண் எழுத்து தீ இரவு பகல் ஆண் பெண் பேடு ஆகிய எத்தன்மையும் இல்லாதவன் என்று

அதே சமயம் வலிவலம்  தாண்டகத்தில்

பெண்ணவன் காண் ஆணவன் காண் பெரியோர்க்கு என்றும் பெரியவன் காண்

அரியவன் காண் அயனானான் காண் எண்ணவன் காண் எழுத்தவன் காண் இன்பக் கேள்வி இசையவன் காண்

இயலவன் காண் எல்லாங் காணுங் கண்ணவன் காண் கருத்தவன் காண் கழிந்தோர் செல்லுங் கதியவன்காண்

மதியவன் காண் கடலேழ் சூழ்ந்த மண்ணவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவனென் மனத்து உளானே
என்கிறார்

அப்பரடிகள் திருவொற்றியூரில் காணும் போது இறைவன் எதுவுமாக தெரியாமல் இருக்கிறான் அதே வலிவலத்தில் பாடும் போது

முன்பு எதுவாகவெல்லாம் இறைவன் இல்லை என்றாரோ அதுவாகவெல்லாம் இருக்கிறான் என்கிறார் சுவாமிகள்

பெண் ஆண் பெரியான் திருமால் பிருமன் எண் எழுத்து  மண் மதி ஆகிய அனைத்துமாக இருக்கிறான்

அப்பரடிகளின் கருத்து முரண்பட்டது போல தோன்றும்

அதை விளக்கத்தான் மீன் குழம்பு வருகிறது இங்கு

கடல் இருக்கிறதே அது உலகத்திற்கே உப்பை வாரி வழங்கினாலும் தன் உவர் தன்மை மாறாமல் இருக்கும் அளவுக்கு உப்பை தன்னகத்தே கொண்டிருந்தாலும்

அதில் வாழும் மீன்கள் உப்பு சுவையுடன் இருப்பதில்லை
மீனை சமைக்கும் போது உப்புப் போட்டுதான் சமைப்போம்

உப்பு நீரிலேயே வாழ்ந்தாலும் மீன் உப்பு சுவை ஏறாமல் உள்ளது

ஆக கடலில் இருந்தாலும் கடல் நீரின் தன்மையில் மீனின் தன்மை மாறுபடுவது இல்லை

அதே போல சிவம் உலகியல் செயல்கள் அனைத்திலும் கலந்து சர்வம் சிவமாய் நின்றாலும் அதன் தன்மை யாதொரு உலக செயல்களோடும் ஒப்பிடக்கூடியதாக இருக்காது

 உலகில் ஆணாக பெண்ணாக பேடியாக விண்ணாக மண்ணாக கடலாக காற்றாக எண்ணாக எழுத்தாக இசையாக இயலாக யாதுமாகவும் சிவமே நிற்கிறது என்றாலும்

இதில் எந்த  தன்மையும இறைவனது நிலையான தன்மை இல்லை என்பதே

அப்பரின் அரிய முடிபு🙏🏻

தீபன்ராஜ் வாழ்க்கை

நமசிவாய

No comments:

Post a Comment