திருமுறைகளின் சொல்லாடல்களுடன் நம் இன்றைய வாழ்வியல்களை பொருத்தி பாக்கும் போது நாம் எத்தகைய கீழான நம்பிக்கைகளில் வாழ்ந்து வருகிறோம் என்பது புரியும்
சைவத்தை பொறுத்த வரை அது காட்டும் இறைவன் இன்பம் துன்பம் இனிமை கசப்பு வெறுப்பு காதல் புனிதம் அசுத்தம்
என்று எதற்கும் பொருந்தாத அப்பாற் பட்ட ஒரு சக்தியாக இருக்கிறான் என்று சொல்லும்
இதை பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளாமல் பல இடங்களில் இறைவன் முன் அனைத்தும் சமம் என்பதை அறியாமல் ஆட்டம் போடுகிறோம்
நறுமண மலர்களை சூடிக்கொள்ளும் இறைவன் எலும்புகளையும் கட்டி மாலையாக போட்டுக் கொள்கிறான்
செத்தார் எலும்பை அணிந்தான் திருக்கேதீச்சரத்தானே என்று சுந்தரர் பாடுவார்
என்பலால் கலனும் இல்லை எருதலால் ஏறல் இல்லை என்று அப்பர் பாடுவார்
இறைவனுக்கு பூமாலை இனிமை தருவதில்லை அதுபோல் எலும்பு மாலை துன்பம் தருவது இல்லை இரண்டுமே சமம்தான்
இன்றைய காலங்களில் சாலையில் போகும் போது சவ ஊர்வலம் வந்தாலே முகம் சுளிப்பவர்கள் ஏராளம், பிண ஊர்வலத்தில் கீழே கிடக்கும் பூக்களை மிதித்தாலே குளிப்பவர்கள் இருக்கிறார்கள்
கோயில் வாயிலை பிண ஊர்வலம் கடக்கும் போது மேளம் கொட்டுவதை நிறுத்தி செல்வார்கள், கடவுளுக்கு சாவு துக்கம் இதெல்லாம் ஆகாது என்று முடிவு செய்து விட்டார்கள் போலும்.
ஆனால் நம் சைவத்தில் இறப்பும் பிறப்பும் சமம் இரண்டுமே வாழ்வின் முக்கியமான நகர்வுகள் என்பதை தெளிவாக உணர்ந்ததால் தான்
சுந்தர மூர்த்தி சுவாமிகளால்
ஓவு நாள்
உணர்வு அழியும் நாள்
உயிர்
போகும் நாள்
"உயர் பாடை" மேல்
காவுநாள்
என்று பாடையை குறித்து பதிகம் பாட முடிந்துள்ளது
சகுனம் பார்க்கும் போது பல்லி சொல்லுதல் காகம் கரைதல் ஆந்தை அலறல் என்று எல்லாத்துக்கும் ஒரு காரணம் வைத்திருப்போம்
அதிலும் இந்த ஆந்தையை கண்டாலே பலருக்கு குலை நடுங்கும்
ஆந்தை அலறினால் மரணம் வரும் என்று நம்புவார்கள் அது எந்த திசையில் இருந்து அலறுகிறது என்று எண்ணுவார்கள்
ஆனால் சுந்தர மூர்த்தி சுவாமிகளும் அவர் காட்டும் சைவமும் உயிர்களிடத்தில் அன்பு செய்யக் கூடியதாக அனைத்தும் இறைவன் முன் சமம் என்று சொல்லக்கூடியதாகவும் உள்ளது
என்பதற்கு சான்றாக அமைந்த வரி இது
பொத்தில் ஆந்தைகள் பாட்டறா புகலூரைப் பாடுமின் புலவீர்காள்
என்கிறார்
எத்தனையோ இடங்களில் மயில் ஆடும் குயில் பாடும் அன்னம் மேயும் மந்திகள் களிப்புறும் ஊர்களை குறிக்கிறார் சுவாமிகள்
மேற்கண்ட வரியை பார்க்கும் போது அந்த விலங்குகள் குறித்த வர்ணனை கவிநயத்துக்காக சேர்க்கப் பட்டவை அல்ல அவ்வூரில் தெரிந்த உண்மைக்காட்சி என்பது புரியும்
அழகுக்காக கவிநயத்துக்காக பாடுபவர்கள் யாரும் நிச்சயம் ஆந்தைகள் அலறுவதை குறிக்க மாட்டார்கள் குறித்ததும் இல்லை
ஆனால் நம் சுவாமிகள் பாடிய திருமுறை ஆந்தையின் அலறலைக்கூட பாட்டு என்கிறது
இறைவனது படைப்பில் சில விலங்குகள் புனிதமற்றவை என்று சொல்லும் சமய நெறிகளுக்கு இடையில் இயற்கையின் பரிணாமத்தில் அனைத்து உயிரினங்களும் சமம் என்பதை இதைவிட அழகாக வேறு எதனில் குறிக்க முடியும்?!
குயிலின் குரல் பாடல் என்றால் புகலூரில் சுவாமிகளின் காதில் எங்கிருந்தோ வந்து விழுந்த ஆந்தையின் அலறல் ஓசையும் பாடலாக கேட்டுள்ளது
காரணம் தமிழனின் இயற்கை நேசிப்பு
இறைவனின் முன்பு அனைத்தும் சமம் என்ற உணர்வு நம் திருமுறைகளின் மாண்பு
என்று சொன்னால் மிகையில்லை
தீபன்ராஜ் வாழ்க்கை
நமசிவாய


No comments:
Post a Comment