திருமறைக்காடு என்னும் இன்றைய வேதாரண்யத்திற்கு நம் சொற்கோவாம் அப்பரடிகளும் தோணிபுர தோன்றலாம் சம்பந்தப் பெருமானும் இணைந்து எழுந்தருளினர்
அதுசமயம் அகில மறைகள் அனைத்தும் சேர்ந்து பூசித்து மறைக்காட்டு கோயில் வாயில் அடைத்தமையும், அதுமுதல் கதவு திறக்கப் படாமல் மக்கள் புறவாயில் வழியே சென்று இறைவனை வழிபட்டனர் அவ்வூரில்
என்ற செய்தி கேட்டு பெருந்துயர் எய்தினர்
இறைவனை நேரே சென்று காணமுடியாத இந்நிலையை மாற்ற வேண்டும் நாமும் மருங்கு ஒரு வாயில் சென்று வழிபடல் ஆகாது வீரது ஏறு நம் தமிழின் வல்லமையால் திருக்கதவம் திறப்பிப்போம் என்று
சைவத்தின் இருபெரும் மன்னர்களும் முடிவு செய்தனர்
நம் சம்பந்தப் பெருமான் அப்பரடிகளை பணிந்து மூத்தவர் என்கிற முறையில முதல்வழி செய்யப் சொல்லி
நிராமய பரமானந்த நின்மல மூர்த்தியை நேர் இறைஞ்ச நீரே திருக்கதவம் திறக்க பாடும் அப்பரே.
என்று கேட்டு கொண்டார்
அப்பரடிகளும் பெருமானை பணிந்து
பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ
என்னும் துவக்கத்தினை உடைய பதிகம் பாடினார்
அப்பர் பெருமானுக்கு நிச்சயம் ஒரு உணர்ச்சி பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்
நம் சம்பந்த பிள்ளையார் கதவம் திறக்க பாட சொல்லி விட்டார்
நம் தமிழுக்கு செவி சாய்த்து இறைக்கருணை செய்ய வேண்டுமே என்று எண்ணினார் போலும்
பதிகப் பாடல்தோறும் கதவு திறக்க கோரிக்கை வைக்கிறார் இப்படி
கதவினைத் திண்ணமாகத் திறந்து அருள் செய்ம்மினே
நீண்ட மாக்கதவின் வலி நீக்குமே
சட்ட இக்கதவம் திறப்பிம்மினே
பெரிய வான் கதவம் பிரி விக்கவே
தொலைவிலாக் கதவந் துணை நீக்குமே
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே
இந்த மாக்கதவம் பிணி நீக்குமே
மாறிலாக் கதவம் வலி நீக்குமே
திண்ண மாக்கதவம் திறப்பிம்மினே
என்றெல்லாம் பத்து பாடல்களில் கதவு திறக்க கோரிக்கை வைத்தும் கதவு திறக்கப்பட வில்லை
நிச்சயம் இது அப்பர் பெருமானுக்கு ஒரு சங்கடமான சூழ்நிலைதான்
சம்பந்தப் பெருமான் திறக்க சொல்லி பார்த்துக் கொண்டிருக்கிறார் மக்கள் பார்க்கின்றனர்
தவிர அப்பரடிகள் பெரும்பாலும் பத்து பாடல்களுடன் பதிகத்தை முடித்து விடுவார்
எப்போதாவதுதான் பதினோறாம் பாடல் உருவாகும்
ஆக பத்து பாடலும் முடிந்து விட்டது இன்னும் இருப்பது ஒரே ஒரு பாடல்
அதனுடன் அவர் பதிகத்தை முடித்தாக வேண்டும் கதவு திறந்தாக வேண்டும்
நிச்சயம் இக்கட்டுதான் என்ன செய்வது??
அப்பரடிகள் தனது ஒவ்வொரு பதிகத்தின் இறுதி பாடலிலும் இராவண கர்வ பங்கத்தை குறிப்பார்
ஆக கதவு திறந்தாலும் திறக்க வில்லை என்றாலும் இத்தோடு பதிகத்தை நிறைவு செய்வது என்று முடிவு செய்து கடைசிப்பாடலை துவங்கும் அப்பரடிகள்
அன்று அரக்கனை விரலால் அடர்த்திட்ட எம்பெருமானே!? கதவினை திறக்க இத்தனை தூரம் கெஞ்சுகிறேனே நீர் என்ன இரக்கம் இல்லாதவரா??
உடனே கதவினை சரக்கென்று திற என்று இறைவனையே இரக்கம் இல்லாதவன் என்று உரிமையுடன் சாடி ஆணையிடுகிறார்
இப்படி
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்று இலீர் எம்பெருமானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக் காடரோ
சரக்க இக்கதவம் திறப்பிம்மினே
உடனே அடைத்த கதவம் திறக்கிறது, கண்கொள்ளா காட்சி தெரிகிறது
மறைக்காடன் மான்மழுவேந்தி.தோன்றுகிறான்
கண்ட கண்கள் புனல் பாய, களிப்பாய் உள்ளம் கரை புரள, விண்ட மொழியின் நாக்குழற, விம்மி மேணி மயிர் சிலிர்ப்ப, பண்டை வசம் போய் பரவசமாய் பரமானந்த தெளி நரவம் உண்டு மகிழ்ந்தார் அப்பரடிகள்
இறைவனின் பெருங்கருணைத் திறனை வெளிப்படுத்தும் பதிகம் இது
இறைவனை தமிழால் மயக்கி தன்னிலை மறக்க வைத்தது எம் தமிழ் அடைத்த கதவம் திறப்பித்தது எம் தமிழ்
இந்த தமிழை முழுமையாக கேட்கவே இறைனும் கதவு திறக்காமல் காலம் தாழ்த்தினார் என்பார் சேக்கிழார் அதுதான் உண்மையும் கூட
இதே போல சம்பந்தரின் தமிழ் கேட்க அவரிடமும் இறைவன் விளையாட்டு காட்டிய சம்பவம் ஒன்று உண்டு அதனை பிறிதொரு சமயம் காண்போம்
தீபன்ராஜ் வாழ்க்கை
9585756797
நமசிவாய

No comments:
Post a Comment