பதிவுகள்

Tuesday, 11 April 2017

தமிழனின் கோயில் கலைப்பேசும் அப்பரடிகள்

கருப்பறியல் பொருப்பனைய கொகுடிகோயில்

 பார்க்கும் இடம் எங்குமொரு நீக்கமற நிறைந்த பரிபூரண ஆனந்தன் இறைவன் என்றாலும் அவனை நியமங்களோடு வழிபடவும் சமயநெறியை போற்றவும் கலைகளை பெருக்கவும் களஞ்சியங்கள் காக்கவும் வரலாற்றை காட்சி படுத்தவும் இயற்கை சீற்றங்களால் குடிமக்கள் பாதியா வண்ணம் தங்க கெள்ளவும் திருவிழாக்கள் நடத்தி களிப்புறவும்

உலகம் முழுதுமே மக்கள்  பலவித கோயில்களை எடுத்து வழிபட்டுள்ளனர் என்றால் அது மிகையில்லை

நம் தமிழகத்தை பொறுத்த வரை கடல்கடந்து தேசம்பிடித்து பெரும் செல்வத்தோடு வாழ்ந்த மன்னவர்கள் கூட தங்கள் இருப்பிடங்களான அரண்மனைகளை காலத்தால் அழியக்கூடியதாக அமைத்துக் கொண்டு இறைவன் உறையும் இடங்களை காலத்தால் அழியாத கற்றளிகளாய் பொலிவு செய்து மகிழ்ந்துள்ளனர்

உண்மையில கோயில் என்பது கோ+இல் என்று பிரிக்கக் கூடிய சொல் ஆகும். எனவே மன்னர்கள் வாழும் இடத்தின் பெயரே கோயில் என்று தமிழகத்தில் வழங்கப் பட்டிருந்தது ஒரு பழைய செய்தி

நம் தமிழ் மக்கள் தெய்வங்கள் உறையும் வழிபாட்டு நிலையங்களை கோட்டம் என்று குறித்து மகிழ்ந்துள்ளமை இலக்கிய செய்தி

இன்றும்
சேயோன் கோட்டம்,
குமரக்கோட்டம் கந்தக்கோட்டம் பத்தினிக்கோட்டம் என்ற சொல்லாட்சிகள் நம்மிடையே நிலவுவது இலக்கிய சான்றின் எச்சம் என்றாலும்

கோயில், நியமம், நகரம் ஆகிய சொற்களாலும் இறைவன் உறையும் தலங்கள் குறிக்கப் பட்டுள்ளது என்பதை

நுதல்விழி நாட்டத்து இமையோன் கோயிலும் உவணச்சேவல் உயர்த்தோன் நியமமும் என்ற சிலப்பதிகார வரிகளால் அறியலாம்

கோயிலை குறிக்க பல சொற்கள் தமிழில் இருந்தாலும் கோயில் என்ற சொல்லே பொதுவானதாக அமைந்து விட்டதை அப்பரடிகளின் பாடல் ஒன்றால் அறிவோம்

அப்பர் சுவாமிகள் தம்முடைய ஒரு பொதுப்பதிகத்தில் இறைவன் உறையும் தலங்களை ஊர், பள்ளி, குடி, துறை, நீர்கறை, என்றெல்லாம் வகைப்படுத்திக் காட்டுவார் அந்த பதிகத்தின் ஒரு பாடலில் நம் தமிழர்களின் விதவிதமான கோயில் கட்டிட வகைகளை நமக்கு பட்டியல் போட்டு பெருமிதப் படுத்துகிறார்

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினொடு எட்டும் மற்றும் கரக்கோயில் கடிபொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக்கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்திறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே

என்பது பாடல்

 இப்பாடலில் சுவாமிகள்
ஆலக்கோயில், இளங்கோயில், கரக்கோயில், ஞாழற்கேயில், கொகுடிக்கோயில், மணிக்கோயில், பெருங்கோயில் என்கிற ஏழுவகை கோயில் கட்டிட முறைகள் தமிழகத்தில் இருந்ததை நமக்கு சொல்கிறார்

இதில் பெருங்கோயில் என்பவை மாடக்கோயில்கள் ஆகும். இதற்கு ஆதாரமாக இன்றும் இதே முறைமையில் அழைக்கப் படும் கோயில்கள் அம்பர் பெருந்திருக்கோயில் நன்னிலத்து பெருங்கோயில் ஆகியவையாம்

பெருங்கோயில்


யானை ஏறா வண்ணம் வெற்று தளத்தின் மீது இருமாடி உயரத்தில் அமைக்கப்படும் இவ்வகை கோயில்களை கோச்செங்கண் சோழன் சிவனுக்காக எழுபத்தி எட்டு என்ற எண்ணிக்கையில் கட்டினார் என்ற வரலாற்றையும் சுவாமிகள் தொட்டு செல்கிறார்

ஆலக்கோயில் என்பது ஆனைக்கோயில் என்பதான் திரிபு என்பார்கள். பொதுவாக கோயில் விமானங்கள் கொட்டாஞ்சியை கவிழ்த்து வைத்த வடிவத்தில் இருக்கும் ஆனால் வெகுசில கோயில்கள் பாதி கூம்பு வடிவமாக அதாவது யானையின் பின்புறம் போன்று அமைத்திருப்பார்கள்

வடமொழியில் கஜபிருஷ்டம் என்று சொல்லப்படும் இவ்வகை ஆலக்கோயில்களின் விமானம் யானைப் படுத்து தூங்கும் போது அதன் பின்புறம் போன்ற தோற்றத்தினை உடையதாதலால் அவை தூங்கானை மாடம் என்றும் குறிப்பார்கள்

பெண்ணாகடத்திலும் செம்பனார்கோயில் அருகிருக்கும் திருவிளையாட்டத்திலும் இவ்வகை கோயிலைக் காணலாம்

ஆனைகோயில்


இளங்கோயில் என்பது தற்காலிக வழிபடு தலமாக இருந்து பின்நாட்களில் நிரந்தர வழிபாட்டுக்கு உரியதாக இருப்பதாம். திருப்பணிகள் வருக்கணக்கில் நடைபெறப் போகும் பட்சத்தில் அருகில் சிறியதாக ஒரு கோயில் செய்து அதில் வழிபடுவார்கள் திருப்பணி முடிந்த பின்னும் அந்த சிறுகோயில் வழிபாட்டில் இருந்தால் அது இளங்கோயில் ஆகிவிடும், மீயச்சூர் இளங்கோயில் என்பது மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது குறிக்கத் தக்கது

கரக்கோயில் என்றால் இந்திரன் கரத்தால் செய்தது என்ற புராணக்கதை இருந்தாலும், கரக்கோயில் என்பது தேர் போன்ற அமைப்பினது ஆகும் உயர்ந்த விமானமும் இருபுறமும் சக்கரங்களும் ஆக சமைக்கப் பட்டிருக்கும் வகையினதான கரக்கோயில் தென்கடம்பூரில் மட்டுமே இருக்கிறது. தென்கடம்பை திருக்கரக்கோயிலான் என்பதும் அப்பர் வாக்குதான்

ஞாழற்கோயில் என்பது ஞாழல் என்னும் மரத்தடியில் நிறுவப்பட்ட மண்டபம் ஆகும். ஞாழல்மரம் அடர்ந்த காட்டுக்குள் இருக்குமாம் அதன் அடியில் நிச்சயம் ஒரு சிவலிங்கம் வைத்திருப்பார்களாம் அந்த ஒரு ஞாழல் மரமும் காட்டின் மற்ற மரங்களும் இணைந்து பலகால் உடைய மண்டபமாக காட்சி அளிக்கும் இயற்கை சூழலே இந்நாட்களில் ஆயிரங்கால் மண்டபங்களாக காட்சியளிக்கின்றன என்றாலும் இவ்வகைக் கோயில்கள் தற்போது எங்குமே இல்லை

 இன்றைய திருப்பாதிரிப்புலியூர் என்னும் கடலூரில் முன்நாட்களில் ஞாழற்கோயில் இருந்ததாக கல்வெட்டு ஒன்று கூறுகிறது

கொகுடிக் கோயில் என்பது கொகுடி என்னும் மரத்தால் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்றாலும்

அப்பரடிகள் கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக்கோயில் என்று என்று பாடும் கோயில் இன்றைய நாகைமாவட்டம் தலைஞாயிறு என்னும் ஊரில் இருக்கும் கோயில் ஒரு செயற்கை மலையாகவே காட்சி அளிக்கிறது

சீர்காழி மலைக்கோயில் என்பதும் ஒரு செயற்கை மலையான கொகுடிக் கோயில்தான்

 மணிக்கோயில் என்பது மணியை கவிழ்த்து வைத்தாற் போன்ற விமானங்களை உடையக் கோயில்கள் ஆகும் நாம் காணும் இன்றைய பலக்கோயில்களும் இவ்வகைக் கோயில்கள்தான என்றாலும் தஞ்சைப் பெரியக்கோயில் விமானம் மணிக்கோயிலுக்கு சிறந்த எடுத்துக்காட்டு

இவ்வகை விமானங்களை எட்டு ஆறு என்ற எண்ணிக்கை பட்டைகளை மாற்றி திராவிட, வேசர, நாகர என்கிற மூன்று தனிப்பெரும் கட்டிடக்கலைகளாக வளர்ந்து இன்று நாம் காணும் பல கோயில்களையும் கோபுரங்களுமாக செய்து தந்துள்ளனர் நம் பழம்பெரும் மன்னவர்கள்

கோயில்களுக்கு சென்றால் வழிபாட்டுடன் நின்றுவிடாமல் அது என்ன வகைக்கோயில்?? யார் கட்டியது?? எந்த காலத்தியது?? யார் பாடியது?? என்று தேடி அறிந்து மகிழுங்கள் கேயில்கள் வெறும் வழிபாட்டு தலங்கள் அல்ல அவை வரலாற்று பெட்டகங்கள். வரலாறு உங்களுக்கு தெரிந்தால்தான் உங்கள் பிள்ளைகளுக்கு தெரியும் பிள்ளைகளுக்கு தெரிந்தால்தான் வரும் நாட்களிலும் தமிழனின் கலாச்சாரமும் அவனது சைவநெறியும் தலைநிமிர்ந்து நிற்கும்

தீபன்ராஜ் வாழ்க்கை

நமசிவாய

No comments:

Post a Comment