பதிவுகள்

Saturday, 15 April 2017

அப்பர் காட்சி படுத்தும் தமிழர் மரணச்சடங்கு



பொதுவாக நம் தமிழர் வீடுகளில் பெருந்துக்கம் என்ற மரணம் நிகழும் போது இறந்தவரின் உடலை குளிப்பாட்டி  ஆடை அணிவித்து துணியால் கை மற்றும் கால்களை கட்டி கிடத்தி வைப்பார்கள் இந்த சடங்கினை வழி கூட்டி விடுதல் என்பார்கள் கிராமப்புறங்களில்

இதன் பிறகுதான் இன்னார் இறந்து விட்டார் என்று உறவினர்களுக்கும் நட்புகளுக்கும் செய்தி அனுப்புவார்கள்

இது இன்றும் தமிழக கிராமங்களில் நடக்கும் நடப்பு

நம் அப்பரடிகள் இந்த பாரம்பரிய சடங்கினைக் கூட ஒரு குறுந்தொகை பாடலில் குறித்துள்ளார்கள்

கையினோடு கால் கட்டி உமரெலாம்

ஐயன் வீடினன் என்பதன் முன்னம் நீர்

பொய்யிலா அரன் புள்ளிருக்கு வேளூர்

மை உலாவிய கண்டனை வாழ்த்துமே

என்பது பாடல்

இது ஐந்தாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள
புள்ளிருக்கு வேளூர் பதிகப்பாடல்

அதாவது உங்கள் உறவின் மக்கள் எல்லாம் உங்கள் கைகால்களை கட்டி எங்கள் ஐயன் இறந்து விட்டார் என்று ஊருக்கு அறிவிக்கும் முன்னர் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால்!?

என்ற கருத்தை

கையினோடு கால் கட்டி உமரெலாம்

ஐயன் வீடினன் என்பதன் முன்னம் நீர்

இவ்வரிகளில் கூறும் சுவாமிகள்

பொய்யிலா அரன் புள்ளிருக்கு வேளூர்

மை உலாவிய கண்டனை வாழ்த்துமே

என்றுமே பொய்மை இல்லாத தெய்வமான சிவம் மை போன்ற கருநிற கண்டத்துடன் புள்ளிருக்கு வேளூரில் உறைகிறது

அங்கு போய் தொழுது வாழ்த்துங்கள் என்று நமக்கு அறிவுரை சொல்கிறார்

ஏனென்றால் மனிதப் பிறவி கிடைத்தற்கு அரியது அதனை வீணாக்காமல் இறைவனை ஒருமுறையாவது தொழுங்கள் நமசிவாய என்று சொல்லுங்கள்
என்பது சுவாமிகள் கூறும் கருத்து

 வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி

என்று பாடியவர் அல்லவா அவர்!🙏🏻

இது போன்ற மரணச்சடங்குகளை கூட இறை வழிபாட்டிற்கு உரிய பாடல்களில் இடம்பெறச் செய்து

சைவம் எந்த ஒரு மூடநம்பிக்கைகளும் இடம் அளிக்காத ஒன்று பிறப்பு இறப்பு மேல்கீழ் என்ற பாகுபாடு பார்க்காத கோட்பாடு என்பதை மீண்டும் ஒருமுறை நிறுவும் சுவாமிகள்

நாம் இன்று பின்பற்றும் சடங்கு ஒன்று, அவர்காலத்திலும் பின்பற்ற பட்டுள்ளது என்ற வரலாற்றையும் போகிற போக்கில் பதிவு செய்வது
சுவாரசியம்தான்

தீபன்ராஜ் வாழ்க்கை

நமசிவாய



No comments:

Post a Comment