நம் சைவம் காட்டும் நாயன்மார்களில் மிக மூத்தவர் கண்ணப்பர்
நாயன்மார்கள் தொகுப்புக்கு முன்னரே மக்கள் கண்ணப்பர் கதையை மிகத்தெளிவாக அறிந்துள்ளமைக்கு மிகநிறைய சான்றுகள் உண்டு
நக்கீரர் கண்ணப்பர் பெருமறம் என்ற தனி நூலை படைத்துள்ளார் அவரை பின்பற்றி நம் சேக்கிழார் பெருமான் சொன்ன கண்ணப்பர் கதையின் சுவையான சம்பவங்களை காணுவோம்
காட்டில் பன்றி ஒன்றை துரத்தி சென்ற திண்ணன் என்று அழைக்கப்பட்ட நம் கண்ணப்பர் அவரது தோழர்கள் காடன் நாணன் உடன் வெகுதூரம் அதாவது
காளத்தி மலையின் அடிவாரத்திற்கு வந்துவிடுகிறார்
களைப்பும் பசியும் சோர்வு செய்த அவர்தம் கண்ணுக்கு குடுமிதேவர் என்று அழைக்கப்படும் சிவலிங்க மூர்த்தம் ஒன்று தென்படுகிறது
இறைவனது திருமேணி கண்டதும் உள்ளம் உருகி உவப்பெய்தி ஓடிப்போய் அணைத்து தழுவி கொஞ்சி கண்ணீர் பெருக்கி
உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றி கெட்டேன்; இம்மலை தனியே நீர் இங்கு இருப்பதேன்
என்று இறைவன் தனியாய் இருப்பது கண்டு வருந்துகிறார்
இறைவனது திருமேணியில் வழிபாடு செய்ததற்கான பூ முதலான தடங்கள் இருப்பது கண்டு இந்த நல்ல செயலை செய்தது யார்? என்று வினவ
அதற்கு நாணன் எனும் தோழன் வேதியர் ஒருவர் வந்து பூசை செய்ததை பார்ததுள்ளேன் என்கிறார்
உடனே தானும் அவ்வண்ணமே பூசை செய்ய எண்ணிய திண்ணனார்
பூப்பறிக்க, தண்ணீர் கொள்ள, இறைனுக்கு அமுது செய்ய, செல்ல வேண்டுமே ஆனால் இந்த அழகிய இறைவனை விட்டு என்னால் நீங்கவும் முடியவில்லையே என்று நெக்குருகி விழிநீர் பொழிகிறார்
இறைவனை விட்டு போவதும் பிறகு மீண்டும் வந்து அருகில் அமர்வதுமாக இருக்கும் அவரது செயலை
போதுவார் மீண்டு செல்வார் புல்லுவார் மீளப்போவார் காதலின் நோக்கி நிற்பார்
என்று பதிவு செய்யும் சேக்கிழார்
நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே கோதறத் தெரிந்து வேறு கொண்டிங்கு வருவேன்
என்று திண்ணனார் இறைவனிடம் சொல்லி செல்வதாக காட்சி படுத்துகிறார்
திண்ணனார் பின்னே அவரது தோழர் செல்ல, ஏற்கனவே இவர்கள் துரத்தி வந்து கொன்ற காட்டு பன்றி இறைச்சியை காடன் பக்குவம் செய்யும் இடத்திற்கு வருகின்றனர்
காடன் ஓடி வந்து திண்ணா இறைச்சி நன்கு வெந்து விட்டது சாப்பிட வா!! என்று அழைக்க, அதனை பொருட்படுத்தாத திண்ணனார்
காட்டு மலர்களை இறைவனுக்காக பறித்து தம் தலையில் வைத்து கொள்கிறார்
பிறகு வந்து வெந்த இறைச்சியில் இறைவனுக்கு அமுது செய்ய பதமானது எது என்று பார்ப்பவராய்
இறைச்சி துண்டுகளை வாயிலிட்டு சுவைபார்த்து நல்லவற்றை கக்கி அம்பில் கோர்த்து கொண்டு பதமில்லாத வற்றை வீசியெறிகிறார் என்பதை
கொழுந்தசை பதத்தில் வேவ வாலிய சுவைமுன் காண்பன் வாயினில் அதுக்கி பார்த்து சாலவும் இனிய எல்லாம் கோலினில் கோத்து காய்ச்சி
என்று எழுதுவார் நம் சேக்கிழார் பெருமான்
மஞ்சனம் ஆட்ட உன்னி மாநதி நன்னீர் தூய வாயினிற் கொண்டு, கொய்த தூநறு பள்ளித்தாமம் குஞ்சி மேல் துதையக் கொண்டு
என்று திண்ணனார் இறைவனுக்கு நீராட்ட வாயில் நீரும் மாலை போட தலையில் பூவும் அமுது செய்ய காட்டு பன்றி இறைச்சியும் கொண்டு சென்ற பாங்கை சொல்கிறது பெரிய புராணம்
இறைவன் மீது ஏற்கனவே சிவகோசாரியார் சாற்றிய பழைய மலர்களை தம் செருப்பு காலால் அகற்றி வாயில் உள்ள நீரை அன்பாக பொழிந்தார் திண்ணனார் என்பதை விளக்கும் வரிகள் இவை:
முடிமிசை மலர் தாளில் வளைத்த பொற் செருப்பில் மாற்றி வாயில் மஞ்சன நீர்தன்னை விளைந்த அன்புமிழ்ந்தார்.
நீராட்டியப்பின் இறைவனை அமுது செய்தருளும் படி ஒரு தாய் பிள்ளையிடம் வேண்டுவது போல குழைவாக இது மிகவும் இனிய இறைச்சி நான் சுவை பார்த்தேன் நாயனாரே!! சாப்பிடும்
என்று திண்ணனார் சொல்வதை
பல்லினால் அதுக்கி நானும் பழகிய இனிமை பார்த்து படைத்த இவ்விறைச்சி சால அழகிது நாயனீரே அமுது செய்தருளும்
என்கிறது பெரிய புராணம்
திண்ணனின் இந்த நிலையை பொறுக்காத உடன் வந்தவர்கள் விலகி போய்விடுகிறார்கள்
இறைவனும் திண்ணனாரும் தனியே இருக்கும் இந்த திருவமுது காட்சியை
அன்னவிம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர்
என்று இறைவன் அமுது செய்தததை கடந்து செல்கிறார் சேக்கிழார். இறைவன் நேரில் வந்து தோன்றினார் என்று குறிக்க வில்லை
அதே சமயம் சிவகோசாரியார் மறுநாள் வந்து அவ்விடத்தை பார்க்கும் போது இறைச்சி எலும்புகள் இலைத் தழைகளுடன் நாய் ஒன்றின் காலடி சுவடு ஒன்றும் காண்பதாக சேக்கிழார் சொல்கிறார்
மகாலிங்க ஐயர் என்னும் ஆய்வாளர் இறைவனுக்கு கண்ணப்பர் வைத்த இறைச்சியை திண்ண வந்த நாய் அது என்கிறார்
ஆனால் நக்கீரர் தம் நூலில் கண்ணப்பர் தம்முடன் ஒரு நாயை வைத்திருந்ததாக கூறுகிறார்
சேக்கிழார் நாயின் காலடியை மட்டும் பதிவு செய்கிறார்
இவ்வாறாக திண்ணனார் இறைவனை அமுது செய்தபின் அவருக்கு இரவு முழுதும் காவல் இருந்து மறுநாளும் சென்று அதே போல பூசை பொருட்கள் கொண்டு வருகிறார்
இம்முறை இறைச்சியில் தேன் கலந்து எடுத்து வந்து *தேனுடன் கலந்ததிது தித்திக்கும் என மொழிந்து* இறைவனை உண்ண வைக்கிறார்
கண்ணப்பர் இல்லாத சமயம் வந்த சிவகோசாரியார் எலும்பும் சதையுமாக அங்கு தினம் கிடக்கும் கோலத்தை எண்ணி வருந்துகிறார்
இருவரும் மாறி மாறி பூசை செய்ய மனம் வருந்திய சிவகோசாரியாரின் கனவில் தோன்றிய இறைவன்
நீர் வருந்துவது போல இது கொடியவனின் செயல் இல்லை
நம்மீது அன்புடைய அடியவனின் செய்கை. நாளை மறைந்திருந்து பார். என்று அருளி செய்கிறார்
மறுநாள் சிவகோசாரியார் மறைந்திருக்க தம் வழக்கமான பூசை பொருட்களை கொண்டு வரும் திண்ணனாரின முகத்தில் பேரதிர்ச்சி
காரணம் லிங்க திருமேணியில் ஒரு கண்தோன்றி அதில் இரத்தம் ஆறாக பெருகிய வண்ணம் உள்ளது
ஐயோ இது என்ன கொடுமை?? என் தேவா!! தலைவா!! உங்களுக்கு என்ன ஆனது? என்று பதறி தவிக்கிறார்
கொண்டு வந்த பூசை பொருட்கள் தரையில் சிதற விழுகிறார்
*விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வது ஒழிந்திடக் காணார்*
என்று திண்ணனார் இறைவனது குருதியை துடைக்க முயன்று தோற்றதாய் கூறும் பெரியபுராணம்.
குருதி நிற்க வில்லையே என்ன செய்வேன்??
இப்படி உம்மை தனியாக விட்டு விட்டு சென்றேனே
என் பெருமானுக்கு இத்தகைய தீங்கை செய்தவன் எவன்??😡
வா முன்னே!! என்று அங்கும் இங்கும் ஓடுகிறார் ஒருவரும் இல்லை கொடிய விலங்குகளும் இல்லை
மீண்டும் நாயனார் தம்பால் வந்து நீடிய சோகத்தோடு நிறை மலர் பாதம் பற்றி மார்புற கட்டி கொண்டு கதறினார் கண்ணீர் வாற
என்று அவர்தம் சோகத்தை பதிவு செய்கிறது பெரியபுராணம்.
எந்தம் பரமானார்க்கு இனி ஆவதுதான் என்ன??
ஆவியின் இனிய எம் ஆண்டவர்க்கு ஆவதென்ன??
மேவினார் பிரியா எம் விமலனார்க்கு ஆவதென்ன??
😭😭😭😭
என்ற குருதி நிற்காமை கண்டு அழுது புலம்பும் அவருக்கு,
முன் எப்போதோ யாரோ சொன்ன முது மொழி நினைவு வருகிறது
*உற்றநோய் தீர்ப்பது ஊணுக்கு ஊண்*
என்பதுதான் அது
அதாவது தமிழர்களின் மிகப்பழைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
(organic replacement)
அதன்படி இறைவனது பாழ்பட்ட கண்ணில் நம் கண்ணை வைத்தால் சரியாகி விடுமோ என்று அவர் சிந்திக்கவும் நேரம் எடுக்க வில்லை
இறைவனை குணப்படுத்த நல்ல வாய்பபு கிடைத்ததே என்று
*மகிழ்ந்து முன்னிருந்து தன்கண் முதற்சரம் அடுத்து வாங்கி, முதல்வர் தம்கண்ணில் அப்ப, நின்ற செங்குருதி கண்டார்*
என்னும் சேக்கிழார் சொல்கிறார்
திண்ணனார் கண்ணை தோண்டி லிங்கத்தில் அப்பியதும் குருதி நின்றது என்று
இறைவன் கண்ணப்பரிடம் காட்டிய சோதனை அதோடு நின்று விடவில்லை
குருதி நின்ற மகிழ்வை கொண்டாடும் முன்னமே அடுத்தக் கண்ணில் இரத்தம் பெருகப் பண்ணினான்
ஆனால் திண்ணனார் இது கண்டு கலங்கவில்லை
கைவசம் தான் இன்னொறு *கண்* மருந்து உள்ளதே இனி கவலை என்ன என்று தம் அன்பின் மிகுதியில் இறைவனை திணற வைக்கிறார் என்பதை
*மண்டும் மற்றிதனுக்கு அஞ்சேன் மருந்து கைகண்டேன் இன்னும் உண்டொரு கண்*
என்று காட்சி செய்கிறது பெரியபுராணம்
தாமதம் செய்ய வில்லை இந்த கண்ணை தோண்டி விட்டால் இறைவனது புண்ணை காண்பது அரிது என்பதால்
தம் காலைத் தூக்கி குருதி வழியும் கண்ணில் அடையாளம் பதிந்து கொண்டு மற்றொரு கண்ணை தோண்டத்
தயாராகும் பொருட்டு அம்பை கண்ணருகில் கொண்டு சென்றதுதான் தாமதம்
நில்லு கண்ணப்ப
நில்லு கண்ணப்ப
நில்லு கண்ணப்ப
என்று இறைவனின் அமுத வாக்கு மூன்று முறை ஒலிக்க அவனது பாம்பணிந்த திருக்கரம் கண்ணப்பரது கரத்தினை பற்றி தடுத்தது என்பதை
விளக்கும் பாடல் இது
தன் கண் முன் இடக்குங் கையை தடுக்க மூன்று அடுக்கு நாக கங்கணர் அமுத வாக்கு 'கண்ணப்ப நிற்க' என்றே*
இவ்வாறு இறைவனையே திணற வைத்த கண்ணப்பரது அன்பை திளைத்து போற்றாத அருளாளர்களே இல்லை எனலாம்
சேக்கிழார், இவர்தம் பெருமையை உரைக்கும் வல்லர்தான் யார்?? நான் கடவூர் கலய நாயனார் கதை சொல்லப் போகிறேன் என்று விலகிக் கொள்கிறார்
கண்ணப்பர் இறைவனின் வலப்புறம் என்றும் நிற்கும் பதம் பெற்று இறைவனோடு மறைகிறார்
நமசிவாய🙏